அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2000ம் ஆண்டில் புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த இடம் புத்தர் கோயில் கட்ட ஏதுவாக அமைந்தது. இதனை தொடர்ந்து நிப்போசன் மியொ ஹொஜி, தமிழ்நாடு அமைப்பு மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனீகள் சார்பில் கோயில் கட்டப்பட்டது.
மேலும் கோயில் தியான மண்டபத்தின் எதிர்புறம் புத்தகயாவிலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்ட போதி மரத்தடியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் முதன் முதலாக உலக அமைதிக்காக 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரம் அமைக்கப்பட்டு கோபுரத்தின் உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புத்தர் பிறந்த நட்சத்திரம் மற்றும் புத்தர் முக்தி அடைந்த நட்சத்திரமான வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமியன்று புத்த பூர்ணிமா நிகழ்ச்சி ஆண்டுதோறும் இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2,568ம் ஆண்டிற்கான புத்த பூர்ணிமா நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று சங்கரன்கோவில் புத்தர் கோயிலை சேர்ந்த புத்த பிக்குனி லீலாவதி தலைமையில் சர்வ சமய வழிபாடு நடந்தது. இதில் சிறுவர் சிறுமியர்கள் சுற்றுவட்டார கிராமத்தினர் புத்தர் கோவில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், நிப்போசன் மியோ போகி அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள், செங்கோட்டையை சேர்ந்த இண்டோ -ஷாவலின்-குங்பூ அசோசியேசன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தென்னிந்தியாவின் முதல் உலக அமைதி கோபுரத்தில் புத்த பூர்ணிமா சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.