ஆமை வேகத்தில் உப்பனாறு பாலம் கட்டுமான பணி: போக்குவரத்து நெரிசலில் அவதியுறும் மக்கள்

புதுச்சேரி: புதுவையில் ஆமை வேகத்தில் உப்பனாறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தினமும் நகர பகுதியில் டிராபிக் நெரிசலில் சிக்கி அவதியுறும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால்   நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து செல்கிறது. இந்த வாய்க்கால் மீது பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என மாநில அரசு முடிவெடுத்தது. குறிப்பாக காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க கடந்த 2008ல் அரசு திட்டமிட்டது.

இந்த பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.3.50 கோடியில் பாலத்துக்கு பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குபின் கடந்த 2016ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன்பெற்று பாலம்  கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் ரூ.7.15 கோடி மாநில அரசு  பங்குத் தொகையாக ஒதுக்கப்பட்டது. பாலத்தின் பணிகளில் 85% நடந்து  முடிந்தாலும் காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில்  சுமார் 50 மீட்டருக்கு பாலம் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் பாலம் கட்ட மாநில அரசின் பங்கு தொகையில் ரூ.1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில்  மீதமுள்ள ரூ.6 கோடி  வழங்கப்படவில்லை. இதனால் 2019ம் ஆண்டு இறுதியில் பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை திடீரென நிறுத்தவே 3 ஆண்டுக்கும் மேலாக இப்பணிகள்  கிடப்பில் போடப்பட்டன. உப்பனாறு பாலம்  கட்டுமான பணிகள் 15 வருடமாகியும்  ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால்  தினமும் நகர பகுதிகளுக்கு பல்வேறு  தேவைகளுக்காக வாகனங்களில் சென்றுவரும்  பொதுமக்கள் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.

உப்பனாறு பாலத்தில் வாகன போக்குவரத்து எப்போது தொடங்கும், டிராபிக் நெரிசலுக்கு என்று விடிவு பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பணிகள் தாமதமாக நடைபெற்றதோடு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது தொடர்பாக வேதனைப்பட தெரிவிக்கின்றனர். இதுபற்றி புதுச்சேரி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது விலைவாசி அதிகரிப்பால் அதற்கேற்ப பாலம்  கட்டுமானத்துக்கு ஒதுக்கீடு தொகையை உயர்த்த, பணியை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் கோரியுள்ளது.

இதனால் உப்பனாறு  பாலம் கட்டுமான பணிகள்  முழுமையாக முடிந்து எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு  வரும் என்ற கேள்வி  நீடிக்கிறது என்றனர். இருப்பினும் புதுச்சேரியை  ஆளுகின்ற என்ஆர் காங்கிரஸ்-  பாஜக கூட்டணி அரசு உடனே இவ்விஷயத்தில் கவனம்  செலுத்தி பிரச்னைக்கு தீர்வு  கண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பொதுமக்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

புதுச்சேரி நகர பகுதி மக்களிடம் கேட்டபோது, புதுவையில் போக்குவரத்து நெருக்கடி சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வார இறுதிநாட்களில் அதிகளவு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் அந்நாட்களில் நகரப்பகுதியில் ஒவ்வொரு வாகனமு்ம ஊர்ந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. பிரதான சாலைகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலையில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் அதிகளவில் இருப்பதால் கூடுதலாக டிராபிக் நெரிசல் ஏற்படுகிறது. இந்நாட்களில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வருவதில் சிரமம் உள்ளது. உப்பனாறு பாலம் கட்டுமான பணி முடிந்தால் காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை இணைக்கப்பட்டு நெரிசல் ஓரளவு குறைவதற்கான வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: