விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு-தோகைமலை அருகே விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2 முறையாக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், முதலைபட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகள் ஆற்று பாசனமாக இருந்து வருகிறது. மேலும் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சி கிராமங்கள் குளம் மற்றும் கிணற்று பாசன பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியை அதிகமாக விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். இதில் உணவுக்கு தேவையானது போக மீதமுள்ள நெல்லை திருச்சி, மணப்பாறை, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர். அப்போது இடைதரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை நடைபெற்று வந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதனால், தோகைமலை பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, இடை தரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெறவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் முயற்சியால், தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், கழுகூர் மற்றும் கல்லடை ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் சமுதாயக்கூடம் அருகே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் இந்த ஆண்டிற்கான நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கொள்முதல் நிலையத்தில் 2 ரகங்களாக நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

இதில் அரசு நிர்ணய விலையாக சன்ன ரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ 21 ரூபாய் 60 பைசாவிற்கும், மோட்டா (பெரியது கிரேடு சி) ரகம் ஒரு கிலோ 21 ரூபாய் 15 பைசாவிற்கும் பெறப்படுகிறது. நெல்லின் ஈரப்பதம் 15 முதல் 17 (மாக்ஷர்) அளவு இருக்க வேண்டும். மேலும் நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கணிமம் தரம்பார்த்து எடுக்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் நீலம் நிரம் கொண்ட சணலால் 14 சுத்து தையல் அமைக்கப்படுகிறது.

இங்கு விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக வந்து முன்பதிவு செய்ய வேண்டும். நேரடியாக வந்து முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பதிவு வரிசைப்படி கொள்முதல் செய்யப்படுகிறது. முன் பதிவு செய்வதற்கு விஏஓ சான்று பெற்ற அடங்கள், விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் சாக்கில் நெல்லை பிடிப்பதால் சாக்குடன் நெல்லை கொண்டு வர தேவையில்லை.

குவியலாக கொண்டு வந்தால் போதும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு 3 நாட்களில் தங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையமானது அறுவடை பருவ காலம் முடியும் வரை செயல்படும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல் அய்யர்மலையில் உள்ள தமிழ்நாடு அரசின் தானியக்கிடங்கில் சேமிக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால் தமிழ்நாடு அரசுக்கும், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கும் இப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Related Stories: