கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கரூர் அருகே சோகம்

கரூர்: கரூர் அருகே கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் புதூர் கீழ்ப்பாகம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), இளங்கோ மகன் மாரிமுத்து (12). தனியார் பள்ளியில் 7ம்வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீவிஷ்ணு(14). அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான மூவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் வெயில் அதிகமாக கொளுத்தியதால் நேற்றுமுன்தினம் காலை 3 பேரும், பெற்றோரிடம் குளிக்க செல்வதாக கூறி சென்றனர். வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் மகன்கள் வராததால் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஆண்டாங்கோயில் புதூர் பகுதிக்குட்பட்ட விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றோரம் 3 சிறுவர்களின் செருப்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் வெயிலுக்காக கிணற்றில் டைவ் அடித்து குளித்தபோது மூழ்கியிருக்கலாம் என தெரிய வந்தது. உடனடியாக போலீசாரும், கரூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்து 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் இறங்கி தேடினர். இதில் நள்ளிரவு 12 மணியளவில், மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கரூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: