பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கருத்தரங்கம்: தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

சென்னை: கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் கர்நாடக வர்த்தக, தொழில் கூட்டமைப்பின் சார்பாக, தக்சின் பாரத் உத்சவ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில் பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திரா லகோடி, தமிழக சுற்றுலாத்துறை இணை இயக்குநர் பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமரஜா ஆகியோர் பங்கேற்றனர்.

ரமேஷ் சந்திரா லகோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தென்னிந்திய மாநிலங்களின் சுற்றுலாத்திறனை மேம்படுத்தும் விதமாகவும், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இந்த சுற்றுலா கருத்தரங்கம் அமையவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் புதிய முயற்சியை எடுத்து இருக்கிறோம்’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில்; தமிழ்நாடு முதல்வர், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா என அனைத்து மாநில சுற்றுலா துறையையும் ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியை கர்நாடக அரசும் எடுத்து வருகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்க கூடிய வாகன நெருக்கடியால் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இ-பாஸ் முறையை கட்டாயமாக முதலமைச்சர் அப்புறப்படுத்தி விட்டு, அங்கு மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் கார் நிறுத்துவதற்கு அடுக்கு மாடிகளை அமைத்திட வேண்டும். அப்படி, ஒரு சூழலை நிறுவினால் மட்டுமே வருங்காலத்தில் ஊட்டி போன்ற மலைச் சிகரங்களில் இருக்கக்கூடிய வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுற்றுலா மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இதை செய்து தர தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

அதேபோல், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைகளை மேம்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் நிதிகளை கொடுத்து தங்கும் விடுதி, வணிக வளாகம் போன்றவற்றை அமைப்பதற்கு வணிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு பல நல்ல முயற்சிகளை எடுத்து, அதனை மேம்படுத்தினாலும் சில தவறான அதிகாரிகள் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அதற்கு இடமில்லாமல் சிங்கிள் வின்டோ சிஸ்டம் எனப்படும் ஒற்றைச் சாளர முறையை கொண்டு வரவேண்டும் என்றார்.

The post பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கருத்தரங்கம்: தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: