வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் மீன்பிடி தொழில் ஜோர்: மீன் கிலோ ரூ.600; நண்டு ரூ.500க்கு விற்பனை

வருசநாடு: வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. மழையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக ஆற்றில் கெண்டை, கெளுத்தி வகை மீன்கள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் மழையளவு குறைந்ததால், ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது மிக குறைவான அளவில் மட்டுமே நீர்வரத்து உள்ளது.

இதனால் பெரிய அளவிலான மீன்கள் அனைத்தும் மீண்டும் வைகை அணைக்கு சென்று விட்டன. தற்போது குறைந்த நீரில் அதிக அளவிலான சிறு மீன்கள் காணப்படுகிறது. பொதுமக்கள் கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர். இதேபோல் பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் சைக்கிள் டயர்களில் தீ பற்றவைத்து, அந்த வெளிச்சத்தின் மூலம் நண்டு மற்றும் மீன்களை பிடித்து வருகின்றனர். இரவு நேரத்தில் தீயில் இருந்து வரும் வெளிச்சத்தை நோக்கி மீன்கள் படையெடுத்து வருவதால், மாணவர்கள் கைகள் மூலமாகவே மீன்களை எளிதாக பிடித்து விடுகின்றனர்.

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் 1 கிலோ ரூ.500 முதல் 600 வரை கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஆற்றில் பிடிக்கப்படும் நண்டுகளும் கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கிராம வாசிகள் கூறுகையில், ஆற்று மீன் சளி, இருமலைப் போக்கும். இதனால் ஆற்று மீனுக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது என்றனர்.

Related Stories: