பாணாவரம் அடுத்த சூரை ஊராட்சியில் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு 100 நாள் தொழிலாளர்கள் மவுன அஞ்சலி

பாணாவரம் : பாணாவரம் அடுத்த  சூரை  ஊராட்சியில் துருக்கி, சிரியா  ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு 100 நாள் தொழிலாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.சோளிங்கர் ஒன்றியம் பாணாவரம் அருகே உள்ள சூரை  ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மூலமாக நடைபெறும் வேலைகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கி, சிரியா  ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவிற்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்த்த சூரை 100 நாள் திட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும்  அடைந்தனர். மேலும், ஊராட்சியில் நேற்று வேலைக்கு வந்த 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பெருமாள், ஆயல் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமையில், பூகம்பத்தில் உயிரிழந்த மக்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட  ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இறந்த மக்களுக்காக ஒரு குக்கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் மவுன அஞ்சலி மூலம் வேதனை வெளிப்படுத்தியது அப்பகுதி மக்களை நெகிழ்சிக்குள்ளாக்கியது.

Related Stories: