சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பிறப்பித்துள்ளார். நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 1963 அன்று சென்னையில் பிறந்தார். மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்து 1989ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதி மகாதேவன், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் வழக்குகளிலும் 25 ஆண்டுகள் சிறந்து விளங்கியவர். அவர் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக (வரிகள்) பணியாற்றினார். மேலும், மத்திய அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த குழு வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9000க்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தினார். கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

கோயில் பாதுகாப்பு, பாரம்பரியமிக்க கோயில்கள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பு அமர்வில் விசாரித்து தமிழகத்தில் பல்வேறு கோயில்களை புனரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.வி.கங்காபுர்வாலா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பொறுப்பேற்கவுள்ளார்.

The post சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: