அரசுப் பள்ளிகளில் காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது அனைத்து வகைகளிலும் கேடானதாகும். முதலில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என்ற அளவில் மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டும் செயலாகும். அடுத்ததாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சமூகநீதிக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.

தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகள் அளவில், அந்தந்த மேலாண்மை குழுவால் நியமிக்கப்படுவதால், அதில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வாய்ப்பில்லை. மூன்றாவதாக, தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மீது எந்தவித பொறுப்புஉடைமையையும் சுமத்த முடியாது. அதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை அரசால் உறுதி செய்ய முடியாது. இந்த மூன்று சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு அரசுப் பள்ளிகளுக்கு நிரந்தரமான ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமே. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அரசுப் பள்ளிகளில் காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: