சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. சிலந்தி ஆறு உடுமலை அமராவதி அணைக்கான நீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக கேரள மாநிலம் திகழ்கிறது.

கேரளாவின் சட்டமூணார் பகுதியில் உள்ள பாம்பார் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் சிலந்தி ஆறு, தேனாறு, சின்னாறு ஆகியவை அமராவதி அணையின் நீர் ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில் தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கான நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் உறுப்பினரான நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 8 கோரிக்கைகளை முன்வைத்தன.

அதில் அமராவதி படுகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. அதேபோல் ஏற்கனவே நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரித்து கண்காணிக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா அரசு விதிகளை மீறி அணைகள்களை கட்ட முயற்சித்தால் அதனை உறுதியுடன் எதிர்க்கும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

The post சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: