நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய எப் பிரிவு ரயில் நிலையம் , நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் கிராசிங் நிலையமாக மாற்றும் பணிகள் நடந்தன. முதலில்  நாகர்கோவிலில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரயில், கோட்டயம் போன்ற பயணிகள் ரயில்கள் இங்கு நின்று சென்றன.

2010 ஆண்டில் இருந்து திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஹப்பா வாராந்திர ரயில்களும் நின்று செல்கின்றன. இது மட்டுமில்லாமல் திருநெல்வேலி - மும்பை, திருவனந்தபுரம் - சென்னை ஆகிய சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டன. பின்னர் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் இருந்தன. நடைமேடையில் இருந்து இளைஞர்கள் கூட ரயிலில் ஏறமுடியாது.

வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் டவுன் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளும் வேகமெடுத்தன. இதனால் டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விரிவாக்க பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பிளாட்பாரம் மேம்பாடு, கூடுதல் பிளாட்பாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.

தற்போது டவுன் ரயில் நிலையத்தில் இரு பிளாட்பாரங்கள், நடைமேடை, பயணிகள் முன்பதிவு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் டவுன் ரயில் வழியாக செல்கிறது. டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றும் முக்கிய பணியாக சிக்னல் கட்டுப்பாட்டு அறை  அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, தற்போது சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கான கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. இதையடுத்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து கிராசிங் ரயில் நிலையமாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டவுன் ரயில் நிலையம் கிராசிங் நிலையமாக மாற்றப்பட்ட பின் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறையும். இது மட்டுமில்லாமல் நாகர்கோவில் மற்றும் இரணியல் ரயில் நிலையங்களில் கிராசிங்கிற்காக ரயில்கள் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

இன்னும் கூடுதல் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, மதுரை, திருச்சி மார்க்கத்தில் புதிய ரயில் இயக்கப்பட வாய்ப்பு உண்டு என்றும், பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

சரக்கு குடோனை மாற்ற வேண்டும்

இது தவிர நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு சொந்தமான பள்ளிவிளையில் உள்ள கிடங்குக்கு எடுத்து வரப்படுகின்றன. இதனால் தாமதம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் அரசுக்குப் பண விரயம் ஏற்படுகிறது.

எனவே டவுண் ரயில் நிலையம் கிராசிங் ரயில் நிலையமாக மாற்றப்படுவதால், சரக்கு ரயில்களை நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவிலில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு குடோனை பள்ளிவிளையில் உள்ள டவுன் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: