கேரளாவில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை ஆம்புலன்சில் பலாத்காரம் செய்ய முயற்சி: மருத்துவமனை ஊழியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக கொடுங்கலூர் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து அவரை கொடுங்கல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடன் செல்ல உறவினர்கள் யாரும் இல்லை. அப்போது, தான் ஆம்புலன்சில் உடன் செல்வதாக அந்த மருத்துவமனை தற்காலிக ஊழியரான தயாலால்  கூறினார். இதையடுத்து அவர்  ஆம்புலன்சில் சென்றார். வழியில் வைத்து இளம்பெண்ணை தயாலால் பலமுறை பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பின்னர், அங்கிருந்தவர்களிடம் தான் இளம்பெண்ணின் உறவினர் என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் வைத்தும் அவர் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். உடல்நலம் சற்று தேறிய பின்னர் சம்பவம் குறித்து இளம்பெண் டாக்டரிடம் கூறினார். இதையடுத்து திருச்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை ஊழியர் தயாலாலை கைது செய்தனர்.

அமைச்சர் உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்திரவிட்டுள்ளார்.

Related Stories: