குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி

ஐதராபாத்: அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அசாம் அரசு நடவடிக்கை எடுத்தால் சிறுமிகளின் நிலை என்ன என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணமாகும்.

இது சட்ட விரோதம் என்பதுடன் தண்டனைக்குரிய குற்றம். அசாம் மாநிலத்தில் சட்ட விரோத குழந்தை திருமணங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதால் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த ஜனவரி 23ம் தேதி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு எடுத்தது.

இதையடுத்து, நேற்று காலை வரையில் குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரசந்த குமார் கூறினார். இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் திருமண சடங்குகளை நடத்திய சாமியார்கள் மற்றும் காஜிக்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுபற்றி ஐதராபாத் நகரில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசும்போது, ‘அசாமில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரம் பேர் மீது அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபற்றி அரசு பேசி வருகிறது. ஆனால், அந்த சிறுமிகளை இனி யார் பாதுகாப்பார்கள்? அவர்கள் மீது மலையளவு சுமையை நீங்கள் சுமத்தி இருக்கிறீர்கள். சிறுமிகளின் கணவன்கள் சிறைக்கு சென்று விட்டால், சிறுமிகளை முதல்வர் பார்த்து கொள்வாரா? அசாமில் 6 ஆண்டுகளாக நீங்கள் அரசாட்சி செய்து வருகிறீர்கள். இது உங்களுடைய அரசின் தோல்வியே. அசாமில் ஏன் அதிக அளவிலான பள்ளிகளை நீங்கள் கட்டவில்லை’ என்றார்.

அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை; முதல்வர்

கைது செய்யப்பட்ட குழந்தை திருமணம் செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பெண்கள் சிலர் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று, நிருபர்களிடம் கூறுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவாகும்.

2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும்’ என்றார்.

Related Stories: