படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றப்பட்டு 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது மீனவர்களுக்கான பாய்மர படகு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டி குமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையின் பின்பகுதி வழியாக இடிந்தகரை பகுதிக்கு கடல் மார்க்கமாக நடைபெறும்.

அந்த வகையில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா தற்போது நடந்து வரும் நிலையில், மீனவர்களுக்கான பாய்மர படகு போட்டி இன்று நடைபெற இருந்தது.

ஆனால் குமரி மாவட்டத்தையொட்டி கடற்பகுதியில் சூறைகாற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே குமரி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக கோவளத்தில் இருந்து படகு போட்டி நடத்தவும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் போலீசாரின் தடையை மீறி படகு போட்டியில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் இருந்து கோவளம் கடற்பகுதிக்கு படகுகளில் மீனவர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

தற்போது 10க்கும் மேற்பட்ட படகுகள் கோவளம் கடற்பகுதிக்கு வந்துவிட்டன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட படகுகள் வந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கோவளம் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகளில் வரும் மீனவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் கோவளம் கடற்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: