அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் ஜோதிபுரம், எம்.டி.ஆர் நகர் வடக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் தெருக்களின் நடுவில் மின்கம்பங்களை ஊன்றியுள்ளனர். இதனால், குடியிருப்புவாசிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். குறிப்பாக ஜோதிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மெயின் தெரு வழியாக 10க்கும் மேற்பட்ட தெருக்கள் நகர் பகுதிக்கு செல்வதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்கும், இந்த மெயின் ரோடு வழியாகத்தான் சென்று வருகின்றன.

இந்நிலையில், தெருவின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே வரும் வண்டிகளுக்கு வழி விடும்போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் இந்த தெரு வழியாக குறைந்தபட்சம் 100க்கும் மேற்பட்ட டூவீலர்கள் செல்கின்றன. தெருவின் நடுவில் உள்ள மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தெருவை கடக்கின்றனர். போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. அப்போது சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே பேவர்பிளாக் கற்களை பதித்துள்ளனர். எனவே, தெருவில் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: