டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இது இலங்கையில் நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தது. டெல்டாவில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் நாகை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.  கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையால் நாகை, காரைக்கால்  மாவட்டங்களில் மழைநீர் தேங்கி 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் 9,000 ஏக்கர் உப்பளத்தில் மழைநீர் ேதங்கி நிற்பதால் உப்பு உற்பத்தி பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. 5,000 ஏக்கர் சம்பா சாகுபடி வயலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. 2,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. 5,000 ஏக்கரில் மழைநீர் தேங்கி நிற்கிறது. புதுக்கோட்டையில் நேற்றிரவு வரை பரவலாக மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதேபோல் மாநகரிலும் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பொழிந்தது.

டெல்டாவில் ஒட்டுமொத்தமாக 1.15 லட்சம் மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையும், திருவாரூரில் பள்ளிகள், தஞ்சையில் பள்ளி, கல்லூரிகள், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். டெல்டாவில் மொத்தமாக 70,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: