வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்

வாட்ஸ்அப் கால் மற்றும் தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் தடுமாறுவதால்,  கூவி கூவி சிம் கார்டுகளை விற்கும் நடைமுறைக்கு முடிவு கட்ட கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு குற்றச்செயல் நடைபெறுகிறது என்றால், அது எதனால் நடைபெற்றது, எவ்வாறு நடைபெற்றது, குற்றவாளி யாராக இருக்கக்கூடும் என்பதை அறிந்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்குள் குற்றவாளிகளை போலீசார் பிடித்து வந்த காலம் மாறி, தற்போது குற்ற செயல்களின் தன்மையை பொறுத்து இந்த குற்ற வழக்கில் இவரை பிடிக்க முடியாது, இது வடநாட்டில் இருந்து செய்யப்படும் மோசடி, இது வெளிநாட்டில் இருந்து செய்யப்படும் மோசடி என கூறும் அளவிற்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதனை கண்டுபிடிக்க முடியாது என்பதை போலீசார் உணர்ந்து வைத்து இருப்பதும் சமீப காலமாக காணமுடிகிறது. குற்றம் செய்பவர்கள் எந்த அளவிற்கு அறிவாளிகளோ, அதைவிட ஒருபடி மேலே சென்று போலீசார் எப்போதும் யோசிப்பார்கள். அந்த வகையில், தற்போது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களால் போலீசாரே சில இடங்களில் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

செல்போன் வந்த பிறகு குற்றம் நடந்த இடத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்து எளிதாக குற்றவாளிகளை போலீசார் பிடித்து வந்தனர். இதனை நன்கு உணர்ந்த குற்றவாளிகள் செல்போன் எண்களை தவிர்த்து வெளிநாட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயல்களின் வாயிலாக பேசத் தொடங்கியுள்ளனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து குற்றவாளிகளின் செயல்பாடுகள் வாட்ஸ்அப் கால், பேஸ்புக் கால், இன்ஸ்டாகிராம் கால் உள்ளிட்டவற்றை தாண்டி தடை செய்யப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பேசுவது, செல்போன் எண்களுக்கு பதிலாக டாங்குள் எனப்படும் இணைய வழி சேவையை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த தொடங்கி வருகின்றனர். இதன்மூலம் சாதாரண குற்றவாளிகளை பிடிப்பதற்கு கூட போலீசார் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் வியாசர்பாடி பகுதியில் நடந்த ஒரு வன்முறை வழக்கை போலீசார் விசாரிக்க தொடங்கியபோது பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளிவந்தன. வியாசர்பாடி பி.வி.காலனி 18வது தெரு, 1வது தெரு, சாஸ்திர நகர், 7வது தெரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஜனவரி 10ம்தேதி 10  பேர் கொண்ட கும்பல் அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் அனைத்தையும் அடித்து உடைத்தனர். மேலும், அதே பகுதியில் 3 பேரை வெட்டிவிட்டு கொடுங்கையூர் பகுதிக்கு  சென்று, அங்கு இம்ரான் கான் என்ற நபரை வெட்டி விட்டு,  அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் புழல் பைபாஸ் சாலையில் ஒரு நபர் மற்றும் பாடிநல்லூர் பகுதியில் 2 பேர், என தொடர்ந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிவிட்டு சென்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஒன்றரை வருடங்களாக வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மிகுந்த கவனத்தோடு கண்காணித்து ரவுடிகளை அடக்கி வந்தனர்.

ஆனால், இந்த சம்பவம் போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.  இதனால் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்ட கும்பல் உடனடியாக ஆந்திரா தப்பிச் சென்றது. இதனையடுத்து இந்த வழக்கில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேருக்கு கை கால்கள் உடைந்துள்ளன. மேலும் முக்கியமான 6 பேரை எம்.கே.பி நகர், கொடுங்கையூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் கையில் அகப்பட்டு விட்டால் கை கால்கள் உடைந்துவிடும் என அறிந்த அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். அவர்களது செல்போன் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த வழக்கில் தொடர்புடைய நரம்பு நவீன், முகேஷ், அஜய் ஆகிய 3 பேர் ஜோலார்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கலைச்செல்வன், கிஷோர், கேபி அருண் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இவர்கள் பிடிப்படவில்லை.

இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் வாட்ஸ்அப் கால் மற்றும் தடை செய்யப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து டாங்குள் வைபை வசதியுடன் பேசி வருவதும், செல்போன் அழைப்புகளை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது. மேற்கண்ட அனைவரும் வியாசர்பாடி பகுதியில் ரவுடியாக வளம்வரும் முருகேசன் மற்றும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து சரவணன் ஆகியவரின் கூட்டாளிகள் ஆவர். ஏரியாவில் பொதுமக்களை அச்சுறுத்த வேண்டும், தொடர்ந்து தங்களுக்கு மாமுல் வரவேண்டும் என்பதனால் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு, அதன்பிறகு போதை மாத்திரைகளை சாப்பிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் இவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முக்கிய 3 பேர் சிக்காமல் இருப்பதற்கு வாட்ஸ்அப் கால் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளும் ஒரு காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் எம்கேபி நகர் போலீசார், கொடுங்கையூர் போலீசார் ஆந்திர எல்லையில் அவர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: