50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு அருகில் வந்த பச்சை வால் நட்சத்திரம்: கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையம் படம் பிடித்தது

கொடைக்கானல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமி சுற்றுவட்ட பாதையில் வந்த அரிய வகை பச்சை வால் நட்சத்திரத்தை, கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அதிகாலையில் கண்டு ரசிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரிய வகை பச்சை வால் நட்சத்திரம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் தென்பட்டது. கடந்த ஜனவரி 12ம் தேதி சூரியனை கடந்த இந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரம், நேற்று அதிகாலை பூமிக்கு மிக அருகாமையில் வந்தது.

இந்த வால் நட்சத்திரத்தை நிற நிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் காவலூர் மற்றும் லடாக்கில் உள்ள ஹான்லே வானிலை ஆய்வு மையங்களில் தொலைநோக்கிகளை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகாலை 4 மணி முதல் விடியும் வரை வால் நட்சத்திரத்தை காணலாம். கடந்த 2 தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மேகமூட்டமாக இருந்ததால், இந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளால் படம் பிடிக்க முடியவில்லை. நேற்று அதிகாலை இந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரம் தென்பட்டது. இதனை கொடைக்கானல் விஞ்ஞானிகள் படம் பிடித்தனர்.

 

இதேபோல் லடாக்கிலும் விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். பூமியை நெருங்கிய இந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்கலாம். பிப். 1ம் தேதிக்கு (நேற்று) பிறகு பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து இந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரம் விலகி செல்லும். எனவே, அதனை தெளிவாக காண முடியாது. இத்தகவலை கொடைக் கானல் வானியல் ஆரா ய்ச்சி நிலைய விஞ்ஞானி எபினேசர் தெரிவித்தார்.

Related Stories: