ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா: நாளை நள்ளிரவு மயான பூஜை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, நாளை நள்ளிரவு மயான பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா,கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, வரும் 6ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக, திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, நாளை (3ம்தேதி) நள்ளிரவு நடைபெற உள்ளது.

இதற்காக, ஆழியாற்றங்கரையோரம் உள்ள ஒரு பகுதியில் மயானம் போன்று அமைக்கும் பணி நடக்கிறது.  மேலும், அப்பகுதி முழுவதும் முட்புதர்களை அகற்றி சீரமைக்கும் பணியும், பக்தர்கள் வசதிக்காக மூங்கில் தடுப்பு கம்பு அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இன்று இரவுடன் இப்பணியை நிறைவு செய்து, நாளை நள்ளிரவு நடக்கும் மயான சிறப்பு பூஜையின்போது, மணலால் அம்மனின் உருவம் அமைக்கப்பட உள்ளது.

மயான பூஜையை காண ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி, உடுமலை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மேலும், பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நாளை இரவு முதல் நாளை மறுநள் காலை வரை, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: