என்.எல்.சிக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

கடலூர்: குறிஞ்சுப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்பு மணி என்.எல்.சி க்கு ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் நீர்-நிலம்-விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் குறிஞ்சுப்பாடியில் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளைநிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சிப்பது ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்டத்திற்கான பிரச்சனை என்று கூறினார்.

வேட்டியை மடித்துக் கட்டினால் என்.எல்.சி நிர்வாகத்தால் தாங்க முடியாது என்று கூறிய அன்புமணி மேடையிலேயே வேட்டியை மடித்து கட்டி,மண்வெட்டியை கையில் பிடித்தபடி என்.எல்.சி க்கு ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி என்.எல்.சி நிர்வாகத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் தனியார் மயமாக்க துடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

என்.எல்.சி நிர்வாகத்தின் முயற்சியை முறியடிக்க பாமக தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்தார். 25,000 ஏக்கர் விலை நிலத்தை கையகப்படுத்த துடிக்கும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அதிமுக இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏன் போராடவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடியது போல என்.எல்.சி பிரச்சனைக்கும் இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: