ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி-நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே, பின்னோக்கி வந்த லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ரங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். கடைசி பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். குருசாமிக்கு சொந்தமாக கிழவிகுளத்தில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விவசாய வேலைக்கு சென்ற குருசாமி பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கிழவிகுளம் கண்மாய் கரையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் காட்டுப்பாதையில், சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தனியாருக்கு சொந்தமான கனரக லாரியை, சிவலிங்காபுரத்தை சார்ந்த செல்லச்சாமி (53), பின்னோக்கி ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அதே பாதையில் வீடு திரும்பிய குருசாமி மீது லாரி மோதி ஏறி, இறங்கியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதை அறிந்த கிழவிகுளம் ஊர் பொதுமக்கள் லாரியை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைக் கண்ட லாரி டிரைவர் செல்லச்சாமி லாரியை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், ‘விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை விவசாயி உடலை எடுக்க விடமாட்டோம்’ என தெரிவித்தனர். இதனால், ராஜபாளையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: