புதுச்சேரி: தனியார் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்ட செயல்பாடுகள் குறித்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தனியார் நிறுவனங்கள் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டப்பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அதனையொட்டி பள்ளி, கல்லூரிகளில் கழிவறைகள் கட்டுதல், சுகாதார நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
