மண்ணெண்ணெய் கேனுடன் வருவதால் உஷார் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லை  : நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருபவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்கூட்டியே தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கொக்கிரகுளத்தில் அமைந்துள்ளது. இங்கு வாரத்தின் முதல்நாள் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளிக்க வருகின்றனர்.

இதில் கடந்த 2017ம் ஆண்டு தென்காசி காசிதர்மத்தை சேர்ந்தவர்கள் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வந்தவர்கள் தீக்குளித்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக இருந்த பல நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருபவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே மனு அளிக்க அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் பலமுறை போலீசாரின் சோதனைக்கு டிமிக்கி கொடுத்து மண்ணெண்ணெய் கேனுடன் தீ குளிக்க முயற்சித்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதற்காக கலெக்டர் அலுவலக பிரதான வாயிலில் தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடுவர்களை பாதுகாக்க கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  மேலும் அப்பகுதியில் எதிர்பாராத சூழ்நிலைகளில் தயார் நிலையில் இருப்பதற்காக தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் னிவாசன் மேற்பார்வையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பிரதான வாசலையொட்டி வடக்கு பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே தடுப்புகள் வைத்து மனு அளிக்க வருபவர்களை கண்காணித்து, சோதனையிடவும், தெற்கு பகுதியில் பெண்கள் சிறை அருகே தடுப்புகள் வைத்து கண்காணித்து சோதனையிட்ட பின்னரே பிரதான வாயில் பகுதிக்கு போலீசார் அனுமதிக்கும்படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்கூட்டத்துக்கு வந்தவர்களை கலெக்டர் அலுவலக பிரதான வாயிலின் இருபகுதிகளிலும் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

Related Stories: