கோயில்களை லாபம் பார்க்கும் இடமாக மாற்றக்கூடாது: போலி இணையதள வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பிரபல கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டது பற்றிய மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘கோயில்களை லாபம் பார்க்கும்  இடமாக மாற்றுவதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் என பிரபல கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஐகோர்ட் கிளையில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இறைவனின் இருப்பிடம் என்பதால் கோயில்களில் பக்தர்கள் கூடுகின்றனர். எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கு சில தீமைகளும் உள்ளன. பக்தர்களின் மத நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர் கோயில் மற்றும் கடவுள்களின் பெயரில் சட்டவிரோத இணையதள முகவரியை துவங்கி மோசடியாக அதிகளவில் பணத்தை வசூலிக்கின்றனர். இந்த கோயில்களை லாபம் பார்ப்பதற்கான இடமாக மாற்றுவதை ஏற்க முடியாது. கோயில்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைத் தவிர வேறு இணையதளங்கள் எதுவும் இருக்கக் கூடாது. கோயில்களின் பெயரில் மூன்றாம் நபர்களால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும்.

போலி இணையதளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலர் மற்றும் தனி தொலைபேசி எண் வசதி ஏற்படுத்த வேண்டும். புகார்களின் மீது முறையாக விசாரித்து உரிய உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜைகள், திருமண கட்டணம் மற்றும் நன்கொடை உள்ளிட்டவைக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். கணக்குகளை முறையாக பராமரித்து, தணிக்கை செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் திருவிழாக்களை முறைப்படுத்த வேண்டும். கோயில்களின் செயல்பாட்டை அறநிலையத்துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும். திருப்பதி மற்றும் சபரிமலையைப் போல வெளிப்படையான, முறையான நிர்வாகம் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: