சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

டெல்லி: சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. 2023-24 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக தெரிவித்தார். அதில் முக்கியமாக குஜராத் மத கலவரம் குறித்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதால் அவர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்று டி.ஆர்.பாலு கூறினார்.

அதானி நிறுவன பங்குகளை வாங்கியுள்ள பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறிய அவர் இதற்கு உரிய தீர்வு காண திமுக வலியுறுத்தும் என்றார். ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார். இது குறித்தும் நாடாளுமன்றத்தில் திமுக பிரச்சனை எழுப்பும் என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது நீடிப்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபாண்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்ட வில்லை என்ற பிரச்சனையை எழுப்ப உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு அளிக்கும் ஒன்றிய அரசு மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  

Related Stories: