டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் ஐ.டி. சோதனை: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் நேற்று ஐ.டி. சோதனை நடந்தது. இதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 28 தொகுதிகளில் இரு கட்டங்களாக (ஏப். 26, மே 7ம் தேதி) நடக்கிறது. முதல்கட்டமாக பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உட்பட 16 இடங்களில் சோதனை நடத்தினர்.

பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. டி.கே.சுரேஷின் நெருங்கிய நண்பரும் முன்னாள் கவுன்சிலருமான கங்காதர் வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. இதில் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்க பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் 22 கிலோ 923 கிராம் தங்க நகைகள், வைரங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் ஐ.டி. சோதனை: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: