கடமலை மயிலை ஒன்றியத்தில் ஆவின் குளிரூட்டும் மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை, முருங்கை, கத்தரி, வெண்டை, சோளம் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்து வருகின்றனர். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் செய்த பலர் கால்நடை வளர்ப்பு தொழிலை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

அதிலும் கரவை மாடு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கறவை மாடு வளர்ப்பு தொழிலில் பால் உற்பத்தி செய்து விற்பனை செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி மூலம் பயன் பெற்று வருகின்றனர். இதில் சிறிய இடங்களில் கூட இரண்டு மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் கொட்டகை அமைத்து 10 மாடுகள் வரை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். வேளாண்மை சார்ந்த தொழில்களில் பெரும்பாலான வேலை வாய்ப்பு அதிக லாபமும் கிடைக்கும் தொழிலாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. இதனால் படித்த பட்டதாரிகளும் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர். கறவை மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள், புல்கள் செடிகள் ஆகியவை இயற்கையாகவே கிடைப்பதால் விவசாய நிலங்களில் கிடைக்கும் தீவனங்களை பயன்படுத்தி வருகின்றன.

கறவை மாடு வளர்ப்பு தொழிலில் உற்பத்தி செய்யப்படும் பால்களை விவசாயிகள் அந்தந்த பகுதியில் இருக்கும் தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்துகின்றன. சிறிய அளவில் கறவை மாடுகள் வளர்த்து தொழில் செய்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அரசு பால் கொள்முதல் நிலையம் தேனியில் உள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் அரசு பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்தாமல் தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்துகின்றனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் ஏராளமான மலைக்கிராமங்களும் உள்ளது. இந்த மலைக்கிராம மக்களின் நலன்கருதி ஆவின் குளிரூட்டும் மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு வீணாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இங்கு சில மாதங்கள் மதுரை ஆவின் பால் குளிரூட்டும் மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பின்பும் ஆவின் குளிரூட்டும் மைய கட்டிடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசு பணம் வீணாகுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கட்டிடங்களுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து மின்சார வாரியத்தின் மூலம் மின்சார சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் குளிரூட்டும் மையங்கள் செயல்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து ஆவின் அதிகாரிகள் கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்பு வண்ணம் பூசப்பட்டு விரைவில் குளிரூட்டு மையத்தை திறக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாடு வளர்ப்போர் கூறுகையில், ‘‘ ஒவ்வொரு ஆவின் மையத்திலும் முறையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மையங்களில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. இதை சீர் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து வருசநாடு பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கால்நடை வளர்ப்பின் மூலம் கறவை மாடுகளை அதிகபடித்தி வந்தோம். மீண்டும் நடைமுறைப்படுத்தினால் பல்லாயிரம் விவசாயிகளும், ஏழை எளிய மக்களும் பயனடைவார்கள்’’ என்றனர்.

Related Stories: