ரேஸ்கோர்ஸ் ரவுண்டானாவில் ‘டான்சிங் நீரூற்று’

கோவை :  கோவை ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி தளம் 100 ஆண்டிற்கு மேல் பயன்பாட்டில் இருக்கிறது. 3.5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள இந்த பகுதியில், கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது. 5 மீட்டர் அகலத்தில் வாக்கிங் பகுதி உருவாக்கப்பட்டு ஸ்டைலான கிரானைட் கோட்டிங் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது.

நடைபயிற்சி செய்பவர்கள்  நடக்கும்போது தரையில் எவ்வளவு தூரம் நடந்து இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.  தீம் பார்க் வடிவமைப்பில் இந்த ஏரியா உருவாக்கப்பட்டு 15-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடத்தும் வகையில் அரங்குகள் உருவாக்கப்பட்டு வருகிறது.  டிராகன் ஸ்விங், ஜிப்பர் லைன் போன்ற விளையாட்டுகள் அடங்கிய தனி மண்டலம் ஏற்படுத்தப்பட்டது.

ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான உடற்பயிற்சி கூடமும் உள்ளது.  யோகா சென்டரும், அக்குபஞ்சர் வாக்கிங் தளமும் உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் போர்டில் யோகாசனங்கள் காண்பிக்கப்பட்டு இதைப்பார்த்து வழிகாட்டி முறைகளின்படி பொதுமக்கள் எளிய முறையில் யோகாசனம் செய்யலாம். ரேஸ்கோர்ஸ் சந்திப்பு (கே.ஜி) ரவுண்டானா உருவாக்கும் பணி நடக்கிறது. இந்த பகுதியில் 45 அடி உயரத்தில் பிரமாண்டமான லைட்டிங் டவர் உருவாக்கப்பட்டது. விரைவில் இங்கே மீடியா ட்ரீ அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அரசு கலைக்கல்லூரி, கிளப் ரோடு சந்திப்பு தீவுத்திடல் ரவுண்டானா பகுதியில் ‘டான்சிங் நீரூற்று’ அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நீரூற்று பொதுமக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘30 அடி உயரத்திற்கு சென்று வரும் வகையில், 44 அடி சுற்றளவில் நீரூற்று பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே கார்டன் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரேஸ்கோர்ஸ் மாடல் ரோடு பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. மீடியா  டவரில் அனிமேஷன் முறையில் ஒளி அமைப்பு வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  தேசியக்கொடி, மலர்கள், பல்வேறு வகையான இயற்கை காட்சிகள் இந்த டவரில் ஒளிக்காட்சியாக தெரியும் வகையில் வடிவமைக்கப்படும். கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது.  நடைபயிற்சி தளம் சுற்றுப் பகுதி முழுவதும் பல வகை தாவரங்கள், மலர் செடிகள் நடவு செய்து வளர்க்கப்படும். செடிகளை சுற்றியும் அலங்கார பல்புகள் அமைக்கப்படும்.‌ ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சிற்ப வடிவமைப்புகள் பொலிவாக மாற்றப்படும்’’ என்றனர்.

Related Stories: