பிபிசி ஆவணப்படத்தின் தடையை எதிர்த்து மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக, இங்கிலாந்தின் பிரபல செய்தி ஊடகமான பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. 2 பாகங்களாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்பட வீடியோக்களை யூடியூப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர கடந்த 21ம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விதித்த தடையானது தவறானது.

தன்னிச்சையானது. அரசியலமைப்பிற்கு விரோதமானது. அதனை ரத்து செய்ய வேண்டும். மேலும், பிபிசி ஆவணப்படத்தில் உண்மை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகள் முக்கிய ஆதாரமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பயன்படக் கூடியவை. எனவே, பிபிசி ஆவணப்படங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். குஜராத் கலவரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் கலவரம் தொடர்பான உண்மைகளை தெரிந்து கொள்ள, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(2) பிரிவின் கீழ் மக்களுக்கு உரிமை உள்ளதா என்பதையும் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: