மூணாறில் களைகட்டும் சீசன் ஸ்ட்ராபெர்ரி கிலோ ரூ.800: அள்ளிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் இந்தாண்டு நிலவும் ‘மைனஸ் டிகிரி’ கடுங்குளிர் புதிய அனுபவமாக மாறி உள்ளதால் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொதுவாக டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தான் மூணாறில் அதிகமான குளிர் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூணாறு பகுதியில் விளையும் கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுவர்.

அதிலும், மூணாறிலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டவடை ஊராட்சியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி  பழங்கள், தற்போது சுற்றுலாப்பயணிகள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இப்பகுதியில் வட்டவடை, கோவிலூர், பழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு ‘வின்டர்டோண்’ வகை ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேயில் இருந்து தோட்டக்கலை துறை சார்பில் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.

தற்போது, இந்த  வகை ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வழக்கமான பழங்களைக் காட்டிலும் பெரிதாகவும், அதிக ருசியுடனும் விளைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே கடும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, ஸ்ட்ராபெர்ரி பழம் விலை உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.

தற்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூணாறில் வட்டவடை, கோவிலூர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இப்பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களை கண்டு ரசித்துத் திரும்புகின்றனர்.

Related Stories: