தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லாததால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், இன்று முதல் அருவி மூடப்பட்டது. கோவை மாவட்டம்  பொள்ளாச்சியை அடுத்துள்ள கவியருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக உள்ளது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.  

கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த தொடர் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.  இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பள்ளி அரையாண்டு, பொங்கல் விடுமுறை போன்ற நாட்களில் ஆழியார் அணை மற்றும் பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், ஆழியாறு கவி அருவியின் நீர் பிடிப்பு பகுதியான கவர்கல், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அருவிக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, பாறைகள் தென்படுவதால் அருவியை மூட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் அருவி மூடப்பட்டது. மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியவுடன் அருவி திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால்,  சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

Related Stories: