மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்

மதுரை: மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பாரதியார் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இப்போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,

 தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அரசு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களும், எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழா தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இன்றைக்கு தனியார் துறையை விட, அரசு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிக்கு வந்து சேரக்கூடிய நிலையும், பள்ளியின் தரமும் உயர்ந்து வருகிறது. தற்போது, கல்வித்துறையில் முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வருங்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் மாணவர்கள். மாணவர்களுக்கு பள்ளி படிப்பு தான் முதல் அடித்தளம். பள்ளியில் படிக்கும்ேபாதே விளையாட்டு உள்ளிட்ட எல்லாவற்றிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

பின்னர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், மாணவர்களுக்கு கல்வி முக்கிய அடித்தளம். எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் இளைஞர்கள். இதனால் முன்னேற்றம், தியானம், மனிதநேயம் பெற வேண்டும் என்பது அரசின் இலக்கு. அடிப்படையில் கல்வி ஒரு பன்முக தன்மையுடன் இருக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம், இலக்கியம் கற்றுக் கொள்ளும்போது, அதே அளவுக்கு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இல்லம் தேடி கல்வித் திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: