சிவகாசியை தொடர்ந்து ராஜபாளையத்திலும் சாலையில் சுற்றிய மாடுகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறை

*மலைவாழ் மக்களிடம் வளர்க்க ஒப்படைத்தனர்

*மேய்ச்சல் நிலம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

ராஜபாளையம் : சிவகாசியை தொடர்ந்து ராஜபாளையத்திலும் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை, வருவாய்த்துறையினர் பிடித்து மலைவாழ் மக்களிடம் வளர்ப்பதற்கு ஒப்படைத்தனர். இதனால், கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ராஜபாளையத்தில் மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர், அவைகளை முறையாக வளர்க்காமல் சாலைகளில் சுற்றித் திரிய விடுகின்றனர்.

இதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த மாதம் 12ம் தேதி திருவள்ளுவர் நகர் ரேஷன் கடையில், பொருட்கள் வாங்க சென்றவர்களை மாடு முட்டியது. இதில், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன், கடந்த வாரம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு நடவடிக்கை எடுத்தனர். நகரில் உள்ள பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, பொன்விழா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சுற்றித் திரிந்த 15க்கு மேற்பட்ட மாடுகளை பிடித்து, வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறையில் வாழும் மலைவாழ் மக்களிடம் வளர்ப்பதற்காக ஒப்படைத்தனர்  ஏற்கனவே, சிவகாசியில் நேற்று முன்தினம் இதேபோல சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை வருவாய்த்துறையினர் பிடித்து மலைவாழ் மக்களிடம் வழங்கினர்.

இதனால், ராஜபாளையத்தில் கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேய்ச்சல் நிலம் அமைத்து தர கோரிக்கை இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில், ‘ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையோர் விவசாயம் செய்கின்றனர். இதனால், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கால்நடைகளுக்கு போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லை.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலை சில ஆண்டுகளுக்கு முன், மேய்ச்சல் நிலமாக இருந்தன. தற்போது அவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. விளைநிலங்களில் குடியிருப்பு பகுதிகளும் அதிகரித்து வருகின்றன. தனியார் நிலங்களை வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். மேலும், விளைநிலங்களில் களைக்கொல்லி மற்றும் மருந்து தெளிப்பதால், கால்நடைகளுக்கு தேவையான இயற்கை உணவான புல், பூண்டு அதிகம் கிடைப்பதில்லை. இதனால், கால்நடைகள் நோய்வாய்பட்டு இறக்கின்றன. கால்நடைகளுக்கு தேவையான மருந்து மற்றும் தடுப்பூசிகளை அரசு வழங்கி வருகிறது.

ஆனால், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. பண்ணைகள் அமைத்து கால்நடை வளர்ப்போர் அதிகமாக போராடுகின்றனர். முன்பு மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து வளர்ந்தபோது, ஆரோக்கியமாகவும், மருந்து செலவினங்கள் குறைவாக இருந்தன. தற்போது போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், அவைகளை அவிழ்த்து விடுகிறோம். எனவே, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மழைநீர் சேகரிப்பு குளங்களை அமைத்து, கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விஸ்வ ஹிந்து பரிசத் மீது புகார்

ராஜபாளையத்தில் வருவாய்த்துறையினர் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்தபோது, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவண கார்த்திக் தலைமையிலான அந்த அமைப்பினர் மாடுகளை பிடிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வருவாய்த்துறையினரை ஒருமையில் பேசி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாசில்தார் போலீசாரிடம் புகார் தெரிவிக்க, அவர்கள் இருதரப்பினரையும் விலக்கி விட்டனார். இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: