ஒன்றிய அரசு இழுத்தடிப்பதால் நீட் விலக்கு மசோதாவை பெற்று ஜனாதிபதி ஒப்புதல் தரவேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

மதுரை: நீட் விலக்கு மசோதாவை, ஜனாதிபதியே நேரடியாக பெற்று ஒப்புதல் தர வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சட்ட, கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழு ஆராய்ந்து தந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் விலக்கு கோரிய மசோதாவை சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளனர்.

இந்த மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக கடந்த 2021, செப்டம்பர் மாதம் அனுப்பியுள்ளனர். ஆனால் உள்துறை, சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகள், மாநில சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சட்ட மசோதாவை, விளக்கம் கேட்கிறோம் என்ற பெயரில் முதலில் ஆளுநர், பின் ஒன்றிய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது. இது  மசோதாவின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் சூழ்ச்சியாகும்.

அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.  இந்நிலையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான  மாணவர் சேர்க்கை சட்டம் 2021   மசோதாவை பிரதமர் தலைமையிலான ஒன்றிய  அமைச்சரவை மேலும் காலதாமதம் செய்யாமல், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப  வேண்டும். அவ்வாறு அனுப்பாவிட்டால், அரசமைப்புச் சட்டத்தை காக்கின்ற பொறுப்புள்ள குடியரசுத்தலைவர் அந்த மசோதாவை தானே நேரடியாக கோரிப்பெற்று, ஒப்புதலை  வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, குடியரசுத்தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: