தேவர்சோலையில் குண்டும் குழியுமான இணைப்பு சாலையால் அவதி: சீரமைக்க மக்கள் கோரிக்கை

கூடலூர்: கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 5வது வார்டு இணைப்பு சாலை பாலம் வயல், ஒற்றுவயல் வழியாக கூடலூர் தேவர்சோலை செல்லும் முக்கிய சாலையாகவும், அப்பகுதியில் பல கிராமங்களையும் இணைக்கும் சாலையாகவும் உள்ளது.  தற்போது இந்த வழியாக எந்த வாகனங்களும் இயக்க முடிவதில்லை. சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் இந்த வழியில் வருவதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.இந்த தார்ச் சாலை கற்கள் முழுமையாக பெயர்ந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

மேலும் அந்த வழியாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால் கூட நீங்கள் நோயாளியை மெயின் ரோட்டிற்கு கொண்டு வாருங்கள் அங்கிருந்து நாங்கள் ஏற்றி செல்கிறோம் எனக் கூறி இந்த பகுதிக்கு வருவதில்லை. இதனால், அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிப்பதாகவும்,  அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுற்றியுள்ள ஊர்களுக்கும் பல்வேறு தேவைகளுக்காக நடந்தே சென்று வர வேண்டி உள்ளது.  

இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பழுதடைந்து கிடக்கும் அந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலையை மழைக்காலத்திற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: