எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு முறியடிப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை; விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

சென்னை: எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவடியில் பாதுகாப்புத் துறைக்கு தேவையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சி செய்தபோது அதற்கு ஆவடி மக்கள் தாமாக முன் வந்து எச்.வி.எப் தொழிற் சாலைக்கு தேவையான நிலங்களை வழங்கினர். அதற்கு கைமாறாக எச்.வி.எப் நிர்வாகம் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஆவடி சுற்று வட்டார பகுதி குழந்தைகள் படிப்பதற்காக கல்விக்கூடங்களை உருவாக்கியது.

அதில் முக்கியமானது ஆங்கிலவழிக் கல்வி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளியும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் விஜயந்தா மாடல் பள்ளியும் நிறுவப்பட்டது. தற்போது மாநில பாடத்தின் கீழ் இயங்கும் விஜயந்தா மாடல் பள்ளியை மூட 11ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை தர பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. அதில், மாநில பாடத்திட்டத்தில் உள்ள மாடல் பள்ளியை சிபிஎஸ்இ பாடத்திற்கு மாற்றுவதாகவும் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்தை கை விடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இப்படி சாதனை படைத்து வரும் பள்ளியை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு விஜயந்தா மாடல் பள்ளி நிர்வாகம் சதி திட்டத்தில் ஈடுபட்டது. மேலும் கடந்த ஆண்டு மாடல் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டித் தருகிறேன் என்று மாணவர்களிடம் கட்டிட நிதியை மாடல் பள்ளி நிர்வாகம் வசூல் செய்தது. ஆனால் புதிய வகுப்பறைகள் ஏதும் கட்டாமல் வசூல் செய்யப்பட்ட நிதியில் சுமார் ரூ.30 லட்சத்தை இந்த நிர்வாகம் கையாடல் செய்து வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதாக ஆவடி எச்.வி.எப் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த மோசடியை மறைக்கவே மாடல் பள்ளியை மூடுகின்ற சதியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது.

இதுதொடர்பாக ஆவடி எச்விஎப் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தமிழர்களுக்கு எதிரான இந்தப் போக்கை உடனடியாக கைவிட்டு மீண்டும் மாடல் பள்ளியை மாநில பாடத்திட்டத்தில் மாணவர்கள் பயில 11ம் வகுப்பு சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் கவனத்திற்கு நாசர் கொண்டு சென்றார். கல்வித்துறை அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியை மீண்டும் நடைமுறைபடுத்த உத்தரவிட்டார். தற்போது மீண்டும் விஜயந்தா மாடல் பள்ளியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் ஆவடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தொகுதி மக்கள் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

The post எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு முறியடிப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை; விண்ணப்ப படிவங்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: