இன்று தொடங்கி 18ம் தேதி வரை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 18ம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழையும் பெய்தது.

இதேநிலை 18ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் இன்று முதல் 18ம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியிலும் குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக் கடல் பகுதியிலும் உருவாகியுள்ள வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக ஜூன் மாதம் கேரளப் பகுதியில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ந்த நிலை தமிழ்நாட்டில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* படிப்படியாக குறையும் வெப்பம்…
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், படிப்படியாக வெப்பத்தின் அளவும் குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம், புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் நேற்று வெயில் இருந்தது. அதிகபட்சமாக ஈரோடு, திருத்தணி, வேலூர் பகுதிகளில் 102 டிகிரி வெயில் நிலவியது. திருப்பத்தூர், மதுரை, சென்னை, தர்மபுரி, நாமக்கல் 99 டிகிரி, கரூர் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிற பகுதிகளில் 97 டிகிரி மற்றும் அதற்கும் கீழும் வெயில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் 102 டிகிரி முதல் 111 டிகிரி வரை அதிகரித்து காணப்பட்ட வெயில் தற்போது அந்தப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.

The post இன்று தொடங்கி 18ம் தேதி வரை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: