மூணாறில் தொடர்ந்து ஹாரன் அடித்து ‘படையப்பா’ யானைக்கு தொல்லை: டாக்சி டிரைவர் மீதுவழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இருப்பினும் யாருடைய உயிருக்கும் இதுவரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் அடிக்கடி ஊருக்குள் வந்து கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு செல்வது இந்த யானையின் வழக்கம். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் ‘படையப்பா’ யானையை விரட்டி காட்டுக்குள் விட்டனர். ஆனால் எத்தனை முறை காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் இந்த யானை ஊருக்குள் வந்துவிடும்.

இந்த யானையை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் மூணாறில் குவிந்து வருகின்றனர். படையப்பாவை காட்டித் தருகிறேன் என்று கூறி பல டாக்சி டிரைவர்களும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். நேற்று இதே போல சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற மூணாறு கடலார் பகுதியை சேர்ந்த தாஸ் என்ற டாக்சி டிரைவர் ‘படையப்பா’ யானையை பார்த்ததும் தொடர்ந்து ஹாரன் அடித்தார். சத்தத்தை கேட்டதும் யானை மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. இது குறித்து இடுக்கி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக டாக்சி டிரைவர் தாஸ் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இது குறித்து அறிந்த தாஸ் தலைமறைவானார். இதையடுத்து அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே தாசின் வாகனத்தை வனத்துறையினர் இன்று கைப்பற்றினர்.

Related Stories: