தமிழ்நாடு முழுவதும் மாட்டு பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்றுமுன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் புத்தாடை அணிந்து காலையில் சூரியன் விடியும் முன்பே, வீடுகளுக்கு வெளியே பொங்கலிட்டு சூரியனுக்கு படையல் வைத்து, சூரிய பகவானை வரவேற்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

 அதன் தொடர்ச்சியாக, நேற்று உழவனின் நண்பனாக இருக்கும், இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளான மாட்டுப் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தாங்கள் வளர்க்கும் மாடுகளை குலதெய்வங்களாக பாவித்து விவசாயிகள் பொங்கல் வைத்து கும்பிட்டனர். அதிலும் குறிப்பாக தங்களது கால்நடைகள் அதிகளவில் பெருக வேண்டும் என்று பகவான் கிருஷ்ணா் மற்றும் இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபட்டு, அதன்பின் கால்நடைகளின் கால்களைத் தொட்டு கால்நடைகளை வணங்கி அவற்றிற்கு ஆராத்தி எடுத்தனர். மாட்டு பொங்கலின் போது, காளைகளையும், பசுக்களையும் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம்பூசி, பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதேபோல், விளைந்த பயிர், காய்கறிகளுடன் பொங்கல் வைத்து மாடுகளுக்கு விருந்து வைத்தனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் காளை மற்றும் பசு மாடுகளுக்கென தனி மதிப்பளித்து கடவுள்களாக போற்றுவர். அதுவே, நாளைடைவில் மாட்டு பொங்கல் பண்டிகையாக உருவெடுத்தது. கால்நடைகளை கவுரவிக்கும் வகையிலும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இடையே இருக்கும் உறவை உறுதி படுத்தும் வகையிலும் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக மாட்டு பொங்கலை திருவிழாக்களாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: