மெரினா கடற்கரையில் இரவில் நேர கட்டுப்பாடு இன்றி மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை, ஜூன் 8: சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பம் தணிக்க மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகிறார்கள். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்க கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். கான்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டிடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலை உள்ளது. கடைகள், ஓட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

எனவே கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேலும் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறையினருக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ், இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் குற்ற செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 54 பேர் மெரினா கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இரவு நேரங்களில் கடற்கரை வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நேர கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்க முடியாது. கடல் ஆமைகள் இரவு நேரங்களில் கடற்கரைக்கு வரும். இதனால் அவற்றிக்கு பாதிப்பு ஏற்படும். சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன்படி பொது இடங்களில் கூடுவதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post மெரினா கடற்கரையில் இரவில் நேர கட்டுப்பாடு இன்றி மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: