கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை வந்தபோது பிரதமர் ₹10 லட்சம் தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை

சென்னை, ஜூன் 8: கணவரின் இதய நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது, பிரதமர் மோடி ₹10 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மூதாட்டியிடம் 5 சவரன் செயினை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தா (75). இவர் தனது கணவரின் இதய நோய்க்கு சிகிச்சை பெற, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்தார். டாக்டர்களை பார்த்துவிட்டு, மருந்து வழங்கும் இடம் அருகே நின்று இருந்தார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவர் என்ன பிரச்னைக்காக மருத்துவமனை வந்துள்ளார் என கேட்டு தெரிந்து கொண்டு, வயதானவர்களின் இதய சிகிச்சைக்கு பிரதமர் மோடி ₹10 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பும் வகையில் அதற்கான படிவத்தை அந்த நபர், மூதாட்டியிடம் காட்டி அதில் கையெழுத்து போட கூறியுள்ளார். பின்னர், மூதாட்டி அணிந்து இருந்த 5 சவரன் செயினை அந்த நபர் கழற்றி கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி செயினை கழற்ற முடியாது, என்று கூறியதும், அந்த நபர் உங்களது செயினில் ஒரு குறியீடு உள்ளது. அதை இந்த படிவத்தில் பதிவு செய்ய வேண்டும், என்று கூறி, செயினை வாங்கியுள்ளார்.
பின்னர், அந்த நபர் படிவத்தில் முகவரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கும் படி கூறியுள்ளார். அதன்படி மூதாட்டி படிவத்தை பார்த்து கொண்டிருந்த போது, அந்த நபர், 5 சவரன் செயினுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி பதற்றத்துடன் அருகில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து மூதாட்டி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர். பிரதமர் மோடி பெயரை கூறி 5 சவரன் செயினை பறித்து சென்ற சம்பவம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை வந்தபோது பிரதமர் ₹10 லட்சம் தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: