2024 மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமான சக்திகளாக இருக்கும்: அமர்தியா சென் கணிப்பு

கொல்கத்தா: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமான சக்திகளாக இருக்கும்’ என பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென் கூறி உள்ளார். நோபல் பரிசு வென்ற பிரபல பொருளாதார நிபுணரான அமர்தியா சென் (90) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவை தேர்தலானது, பாஜ எனும் ஒற்றை குதிரைக்கான போட்டிக் களமாக இருக்கும் என எண்ணினால் அது மிகப்பெரிய தவறு. ஏனென்றால் பல மாநில கட்சிகள் மக்களவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்றே கருதுகிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, திமுக ஒரு முக்கியமான கட்சி. திரிணாமுல் காங்கிரசும் முக்கியமான கட்சி. சமாஜ்வாடி கட்சிக்கென சில நிலைப்பாடுகள் உள்ளன.

எனவே பாஜவுக்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு. அதை புறக்கணிக்க வேண்டும். இந்தியாவின் பார்வையை பாஜ வெகுவாக சுருக்கி விட்டது. இந்தியா என்றால் அது இந்து நாடு. இந்தி பேசும் மக்களைக் கொண்ட நாடு என பாஜ சுருக்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கு அந்த கட்சிக்கு மாற்று இல்லை என்றால் அது வருத்தமளிக்கிறது. பாஜ வலுவாகவும் பலமாகவும் இருப்பதாக தோற்றமளித்தாலும், அதற்கும் வலுவான பலவீனம் உள்ளது. எனவே, மற்ற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே முயற்சிப்பதாக இருந்தால், இதைப் பற்றி விவாதிக்க முன்வர வேண்டும். பாஜவுக்கு எதிரான கட்சிகள் ஒற்றிணைவதை தடுக்கும் சக்தி பாஜவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* அடுத்த பிரதமர் மம்தா?

மேலும் அமர்தியா சென் கூறுகையில், ‘‘நாட்டின் அடுத்த பிரதமராகும் திறமை மம்தா பானர்ஜியிடம் இருக்கிறது. ஆனால், பாஜவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சக்திகளை ஒன்று திரட்டவும், பிரிவினைவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவரால் முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாக தெரிகிறது. எனினும், காங்கிரசை போல அகில இந்திய அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட கட்சி வேறு எதுவும் இல்லை’’ என கூறி உள்ளார்.

* பா.ஜவுக்கு 50 தொகுதிகள் குறையும்

கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர், ‘‘2019 மக்களவை தேர்தலில் 303 தொகுதியில் வென்றதைப் போல 2024 தேர்தலில் பாஜவால் பெரும்பான்மை பலத்துடன் ஜெயிக்க முடியாது. அப்போது புல்வாமா தாக்குதல், பாலகோட் பதிலடி தாக்குதல் சம்பவங்கள் கடைசி நேரத்தில் ஒரு அலையை உருவாக்கின. அவை மீண்டும் நடக்க வாய்ப்பில்லை. எனவே இம்முறை பாஜவுக்கு 50 தொகுதிகள் குறையும். 250 தொகுதியில் பாஜ ஜெயிக்கும். மற்ற கட்சிகள் 290 தொகுதிகளை கைப்பற்றும். ஆனால், அப்போது எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்குமா அல்லது பாஜ 10, 20 பேரை வளைத்து ஆட்சி அமைக்குமா என்பது நமக்கு தெரியாது’’ என்றார்.

Related Stories: