காங்கயம் சுற்று வட்டாரத்தில் காப்பு கட்ட பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூ: பொதுமக்கள் மகிழ்ச்சி

காங்கயம்: காங்கயம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதங்களில் பருவமழை பொய்ததன் காரணமாக ஆவாரம் பூ பூத்துக் குலுங்குகிறது. தமிழத்தில் மார்கழி கடைசி நாளில் வரும் போகிப்பண்டிகை, தை முதல்நாள் பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என, 3 நாட்கள் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகிப் பண்டிகையையொட்டி, வீட்டுக்கு வெள்ளையடித்து, கழிவுப்பொருட்களை அகற்றி சுத்தப்படுத்துவது தமிழர்களின் வழக்கம். காப்பு கட்டுதலுக்காக ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலையும் ஒரு கட்டாக கட்டி, வீட்டு கூரையில் வைக்கப்படும்.

மேலும், வீட்டுக்கு முன் வண்ண கோலமிட்டு, களிமண் பிடித்து அதில் ஆவாரம் பூவை செருகி வைப்பார்கள். நோய் நொடிகளும், துஷ்ட தேவதைகளும் வீட்டில் அண்டாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த காப்பு கட்டும் நிகழ்ச்சி தொன்று தொட்டு நடந்து வருகிறது. காப்புக்கு தேவையாக, ஆவாரம் பூ, பூளைப்பூ கிராமப்புறங்களில், பொட்டல் காடுகளில் இயற்கையாக முளைத்திருக்கும். பொதுமக்கள் பறித்து வைத்து, காப்பு கட்ட பயன்படுத்துவர்.

மார்கழி, தை மாதம் தான் ஆவாரம் பூக்களின் சீசன். தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக தற்போது ஊதியூர், வெள்ளகோவில், காங்கயம் ஆகிய பகுதிகளில் மலை மற்றும் காடுகளில் ஆவாரம் பூ செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி மஞ்சள் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றன.

Related Stories: