சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததையடுத்து, ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 14ம் தேதி தொடங்கிய வேட்புமனுதாக்கல் 21ம் தேதி முடிவடைந்தது. இத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்பு மனு செய்த சிவகங்கையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், தனது வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் ராஜமாணிக்கம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண மனுக்களில் குறைபாடுகள் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு ஏற்கக்கோரி வழக்கு: கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.