சேது சமுத்திர திட்டம் தீர்மானம் பேரவையில் அதிமுக - காங்கிரஸ் மோதல்: ஜெயலலிதா பற்றி மறைமுகமாக பேசியதால் கடும் எதிர்ப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டம் குறித்து கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசியதாவது: ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அனைவரும் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த திட்டத்தை ஏற்கெனவே இதை ஆதரிக்கிறோம் என்று சொன்னவர்கள், தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ளதுபோல் பேசியவர்கள். இப்போது எதற்காக தன்னுடைய நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

செங்கோட்டையன் (அதிமுக): ஒரு தீர்மானத்தை கொண்டுவருகின்றபொழுது, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர், தனது கருத்துகளை சொல்கிறபோது, தீர்மானத்தை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்ற கருத்தை சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த சூழ்நிலையில் அந்த ஆட்சியில், முன்னால் இருந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது சாலப் பொருத்தமாக இருக்காது. ஏனென்று சொன்னால், அவர் ஆதரிப்பதானால் ஆதரிக்கட்டும். எங்களை கொச்சைப்படுத்துகின்ற அளவிற்கு அதில் வார்த்தைகள் வருகின்றன. ஆகவேதான் நாங்கள் அதை கேட்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): இங்கே ஒரு பொருள் குறித்து அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், அந்தப் பொருள் குறித்து இதிலிருக்கின்ற சாதகங்களைப் பற்றி பேசித்தான், அத்தீர்மானத்திற்கு வலு சேர்க்க வேண்டுமே ஒழிய, கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு சட்டமன்றங்களில் பல்வேறு கருத்துகளை பல்வேறு அரசியல் கட்சிகள் கூறியிருக்கலாம். அதை இப்போது குறிப்பிட்டு பேசுவதற்கு நேரமில்லை. அதில் விவாதம் செய்வதற்கு இப்போது இந்தச் சபையை பயன்படுத்தக்கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். . அது தேவையில்லாதது.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு ஒன்றை சொல்கிறேன்.  நீங்கள் மேலோட்டமாக சொன்னீர்கள். 2014-ல் தஞ்சாவூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என்ன பேசினார்களென்றால்... (அதிமுகவினர் எதிர்ப்பு)யார் நீதிமன்றத்திற்கு போனார்களோ, ஆதரித்திருக்கிறார். அவர் பேசியிருக்கிறார். இந்து முன்னணி உறுப்பினர், அந்த அமைப்பை சார்ந்தவர் இதை ஆதரிக்கிறோம், காங்கிரஸ் உண்ணாவிரதம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த வரலாற்று பதிவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ராமாயணத்தைப் பற்றி சொன்னார். ராமாயணத்தைப்பற்றியும் இங்கே பேசியிருக்கிறார்கள்.

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகிற ஒரு மதத்தினுடைய நாயகன் ராமர். ராமர் என்பவர் கற்பனையான கதாபாத்திரம் அல்ல; அவர் ஓர் அவதார புருஷர். ராமர் என்பவர் ஓர் அவதார புருஷர். ராமர் என்பவர் கற்பனை கதாபாத்திரம் என்பதை நீங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் 2,427 கோடி ரூபாய் செலவில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு, எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, மணல் அள்ளப்பட்டிருக்கிறது; அது கடலுக்கடியில் நடக்கிற ஒரு விஷயம்; கண்ணால் பார்க்க முடியாத ஒரு விவரம். அதைப்பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். எவ்வளவு தூரம் தூர்வாரப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி ரூபாய் நிதி அதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்திற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனுடைய சூழ்நிலைகளையும் அனுசரித்து, இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, மக்களுக்கு அதிகளவில் பயன் கிடைக்கக்கூடிய திட்டமாக இருந்தால், இதை நிறைவேற்றலாம். மக்களுக்கான எந்த திட்டத்தையும் அதிமுக எப்பொழுதும் ஆதரிக்கும்; செயல்படுத்தும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: