சேலம்,: சேலத்தில் வரும் 29ம் தேதி நடக்கும் பாமக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்று ஜி.ேக.மணி எம்எல்ஏ தெரிவித்தார். சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் அறிவிப்பார். ராமதாஸ் தலைமையில் தான் பாமக இயங்குகிறது. கட்சி நிறுவனர் இல்லாமல், ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடத்த கூடாது என விதி உள்ளது. பாமகவை நான் இயக்குவதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது.
டெல்லி காவல்துறையில் ராமதாஸ் கொடுத்த கடிதத்தை நான் போஸ்ட்மேனாக கொடுத்ேதன். தலைவர் பதவிக்காக, தேர்தல் ஆணையத்திடம் தவறான கடிதம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தான் கூறினோம். தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்தால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். தேர்தலில் போட்டியிட அன்புமணி விருப்பமனு வாங்குவது தவறு. அதை அன்புமணி தரப்பு வாங்க கூடாது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்.
பாமகவின் அடையாளம் ராமதாஸ் தான். அவர் சொல்வோருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். கட்சி கட்டுப்பாடு குறித்து அன்புமணி எனக்கு அனுப்பிய நோட்டீசை இதுவரை பார்க்கவில்லை. நிறுவனர் ஒப்புதல் இல்லாமல் தலைவர் என்று கூறும் ஒருவர் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு அதிகாரம் இல்லை. அன்புமணி நான் ராமதாசுடன் இருக்க கூடாது என்று நினைக்கிறார். பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. முகவரி தான் மாறி சென்றுள்ளது. முகவரியை மாற்றி கடிதம் அனுப்புமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார். அப்போது மாநில இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
