அண்ணாநகர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்க தெருதெருவாக நடைபயணம்: போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

அண்ணாநகர்: அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ. நகர், டி.பி. சத்திரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதால் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ. நகர், டி.பி. சத்திரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்   தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேபோல், இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட ஒரு மாவட்டத்துக்கு 30 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு, கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் உத்தரவுப்படி சுமார் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் காவல் உதவி மையங்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, திருமங்கலம், ஜெ.ஜெ நகர், நொளம்பூர், டி.பி. சத்திரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெருதெருவாக போலீசார் நடைபயணம் சென்று பொதுமக்களிடம் குற்ற சம்பவங்கள் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம், வழிப்பறி குறித்து கேட்டறிந்து அச்சுறுத்தும் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யும்படி கூறினர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தினமும் சுற்றி வருவதால் எங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளது. இதற்காக போலீசாரை பாராட்டுகிறோம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: