வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட 4 இடங்களில் 11 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: வாகனங்களை நொறுக்கியது கும்பல்: போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு

பெரம்பூர்: வியாசர்பாடி, கொடுங்கையூர், பாடியநல்லூர் என நான்கு இடங்களில் 11 பேரை அரிவாளால் வெட்டி 10க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய போதை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வியாசர்பாடி பி.வி. காலனி 18வது தெரு, 1வது தெரு, சாஸ்திரி நகர் 7வது தெரு, சாஸ்திரி நகர் 11வது தெரு முதல் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மூலக்கடை வரை சுமார் 8 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி வந்து, கையில் கிடைத்தவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டிவிட்டு வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது.

வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (32), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் (24), எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த கோபி (48) ஆகிய மூன்று பேரையும் வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் வைத்து தலையில் போதை கும்பல் வெட்டியதால் காயம் அடைந்து மூன்று பேருக்கும் தலா 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து போதை கும்பல் அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட கடைகளை அடித்து நொறுக்கிவிட்டு மூன்று கார், நான்கு மினி வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியது.

அதன் பின்பு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அத்தோ கடைக்கு சென்ற கும்பல் அத்தோ சாப்பிட்டுக் கொண்டிருந்த கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் மூன்றாவது பிளாக் பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் (32) மற்றும் அவரது மனைவி காயத்ரி (28) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் இம்ரான் கானுக்கு தலை, வயிறு பகுதியில் பலத்த காயம் அடைந்து 30 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரை காப்பாற்ற வந்த அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டு 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

தொடர்ந்து, மூலக்கடை பகுதியில் கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டி விட்டு சென்ற அந்த கும்பல் புழல் பைபாஸ் சாலையில் திருவொற்றியூரை சேர்ந்த ஸ்ரீபன் ராஜ் (20) என்பவரை தாக்கியதுடன் வெட்டி, இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர். அங்கிருந்து சென்ற கும்பல் பாடியநல்லூர் அங்காளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த விக்கி, கார்த்திக், சார்லஸ் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் வெட்டி அவர்களது செல்போனையும் பறித்துச்சென்றது. இப்படி வியாசர்பாடி பகுதியில் தங்களது வெறியாட்டத்தை தொடங்கிய போதை கும்பல் கொடுங்கையூர், மூலக்கடை, புழல் என பாடியநல்லூர் வரை தங்களது அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.

 இதுகுறித்து எம்கேபி நகர், கொடுங்கையூர், புழல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், வியாசர்பாடி பகுதியில் ரவுடிகள் அடித்து நொறுக்கிய கடை மற்றும்  வாகனங்களை நேரில் பார்வையிட்டு அவர்களை பிடிக்க உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், சரவணன், சதீஷ், வானமாமலை  தலைமையில் தனிப்படை அமைத்து கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: