திருவெண்ணெய்நல்லூர் அருகே கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு

திருவெண்ணெய்நல்லூர்   திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.எடையார் கிராமத்தில் வீரன் கோயில் எதிரில் திருக்கோவிலூர் சாலையின் ஓரத்தில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் விஸ்வநாதன் நிலத்தை சீர் செய்தபோது புடைப்புச் சிற்பம்  கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிற்பத்தை விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியரான ரமேஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில் பல்லவர்கள் காலத்து ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி சிற்பம் என கண்டறிந்தனர். இச்சிற்பம் 100 சென்டிமீட்டர் உயரமும், 76 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட மென்கூட்டு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

மூத்த தேவி இரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகற்றிய நிலையில் இரண்டு கரங்களை தொங்கவிட்டவாறு வலது கரத்தில் மலரை கீழ் நோக்கி பிடித்த நிலையில் இடது கரத்தில் தொங்கவிட்டவாறு உள்ளன. காதுகளில் தடித்த குண்டலம் உள்ளன. கழுத்தில் தடித்த அணிகலன் காணப்படுகிறது. மூத்த தேவியின் வலது புறம் மகள் மாந்தினியும், இடது புறம் மகன் மாந்தன் எருமை தலையுடன் காணப்படுகிறான். வலப்புறத்தில் கீழ் அவளது வாகனம் கழுதையும், அதன் கீழ் சக்கரமும், வலது புறம் காக்கை கொடியும், இடது புறம் கீழ் ஒரு ஆண் உருவம் நின்ற நிலையில் உள்ளது. இதன் கீழ் கலசம் காணப்படுகிறது.

மூத்த தேவியின் இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை முடிச்சுடன் தொங்குகிறது. கிராமிய கலை பாணியில் அமைந்துள்ள இதன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு பல்லவர் காலமாகும். தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தலிங்கமடம், மாரங்கியூர், சேத்துப்பட்டு,  திருவெண்ணெய்நல்லூர் போன்ற ஊர்கள் அனைத்தும் சோழர் காலத்தில் சிறந்து விளங்கியதை அங்குள்ள கோயில்களும் சிற்பங்களும் நமக்கு எடுத்து காட்டுகின்றன. இந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இடையார் கிராமம் பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதை காட்டுகிறது.

Related Stories: