கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் உடைந்து கிடக்கும் இருக்கைகளால் பயணிகள் அவதி-உடனே அகற்ற கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் உடைந்து கிடக்கும் இருக்கைகளால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பேருந்து நிலையம் உள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கடைவீதியில் அமைந்துள்ள இந்த பஸ் நிலைய கட்டிடத்திற்குள் பயணிகள் பஸ்சுக்கு காத்திருந்து அமர்ந்திருக்கும் வகையில் இரும்பினாலான இருக்கைகள் அமைந்துள்ளன.

நல்ல முறையில் இருந்து வந்த இந்த இரும்பு இருக்கைகள் கடந்த ஐந்து மாதங்களாக அடிப்பகுதி மற்றும் மேல் பகுதியில் உள்ள கை வைக்கும் பகுதி உடைந்தும், அதில் உள்ள இரும்பு பகுதி கூராகவும் நீட்டிக் கொண்டுள்ளன.இதில் உள்ள ஐந்து இருக்கைகள் அமர்வதற்கு தகுதியற்ற நிலையில் மிகவும் மோசமாக இருந்து வருகின்றன. இதில் அமரும் ஆண் பெண் பயணிகள அமர்ந்து எழும்போது அவர்களின் உடைகள் கிழிந்து விடுகிறது. சிலரின் கை மற்றும் கால் பகுதியிலும் இரும்பு இருக்கையில் உள்ள கூர்மையான தகரம் கிழித்து காயத்தை ஏற்படுத்தி வருகிறது. பஸ்சுக்கு காத்திருந்த பல பயணிகளின் உடைகள் அமர்ந்து எழும்போது கிழிந்தும், கை கால்களில் சிராய்ப்பு மற்றும் காயமும் அடைந்துள்ளன.

மிகவும் வேகமாக வரும் சிலர் அவசரமாக இருக்கையில் அமர்ந்து எழும்போதும் காயம் ஏற்பட்ட பிறகு தான் இருக்கை உடைந்திருப்பது தெரிய வருகிறது. இந்த இருக்கைகள் மிகவும் பழமையாக உள்ளதால் பழுதடைந்து உடைந்தும் கத்தி போன்று கூர்மையாகவும் இருந்து வருகின்றன. எனவே கொள்ளிடம் பஸ் நிலையத்தில் உடைந்த நிலையில் உள்ள இரும்பு நாற்காலி இருக்கைகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: